சோழர் கால ஆடற்கலை

‘சோழர் கால ஆடற்கலை’ என்பது, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநரான வரலாற்றறிஞர் டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்களின் முனைவர்பட்ட ஆய்வுத் தலைப்பு. அந்த ஆய்வேட்டின் அச்சுவடிவான ‘சோழர் கால ஆடற்கலை’ என்ற நூல், தமிழக ஆடல்கலைச் செய்திகளின் கருத்துக் கருவூலம் என்றால் அது மிகையாகாது.

தமிழகத்தின் தலைசிறந்த முன்னோடி வரலாற்றாய்வாளர்களில் தனிச்சிறப்புப் பெற்றவரான டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் மகன் டாக்டர் இரா. கலைக்கோவன். பொழிவுகள், நூல்கள், கட்டுரைகளாக மலரும் தம் தொடர் ஆய்வுப் பணிகளாலும் கல்வெட்டுக் கண்டுபிடிப்புகளாலும் எண்ணிலடங்காப் புதிய வரலாற்றுச் செய்திகளை உலகிற்கு வழங்கிக் கொண்டிருப்பவர்.

28/02/2023 அன்று திருச்சிராப்பள்ளி சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்களுக்காகச் ‘சோழர் கால ஆடற்கலை’ என்ற தலைப்பில் காணொலிப் பொழிவு ஒன்றை வழங்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அன்னாரின் உழைப்பில் விளைந்த ஆய்வு நூலிலிருந்து நான் கற்றுக்கொண்டதை என் பார்வையில் சுருக்கமாகப் பகிரும் நல்வாய்ப்பாகவும் அப்பொழிவு அமைந்தது.

அப்பொழிவில் வழங்கப்பட்டச் செய்திகளை எழுத்து வடிவில் தருவதே இக்கட்டுரை. தமிழ்நாட்டுக் கோயில்களில், குறிப்பாகச் சோழர் கோயில்களில் நான் கண்டு மயங்கிய சிற்பங்கள் பகிர்வுக்குத் துணைநின்றன.

சோழர் கால ஆடற்கலை

திருநல்லம்

மொழி வாயிலாக நாம் அறியும் இலக்கியங்கள், இலக்கியங்கள் வழி நாம் அறியும் தமிழர் பண்பாடு, பண்பாட்டின் பகுதியாக நாம் அறியும் தமிழர் கலைகள் என்று எதைப் பற்றிப் பேசவோ எழுதவோ விழைந்தாலும், பின்னோக்கிச் சென்று அதன் தொடக்கக்கால வரலாறை நாம் பார்ப்பது ஏன்?

அதற்கான முதன்மைக் காரணம்- இலக்கியம், அகழாய்வு, கல்வெட்டு, சிற்பங்கள் வாயிலாகப் பலப்பலச் சான்றுகளை நமக்காக நம் முன்னோர் வாரி வழங்கிச் சென்றிருக்கும் தொன்மைமிகு சமூகம் நம்முடையது என்பதால்தான். நமக்குக் கிடைக்கும் பண்டைய ஆவணங்கள்போல் வேறோர் இனத்துக்குக் கிடைத்திருக்குமா என்றால் அது ஐயம்தான். எனவேதான், இன்றிலிருந்து 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால ஆடற்கலையை நோக்குமுன், இன்றிலிருந்து 2000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆடற்கலை வரலாறு பற்றியும் பார்க்க வேண்டியிருக்கிறது.

தொல்காப்பியத்தில் தமிழர் ஆடல்

புள்ளமங்கை

தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் – வள்ளி, காந்தள், தேர்க்குரவைகள், அமலை, வெறியாட்டு என்று பலவகை ஆடல்களைக் காட்டுகிறது. கூத்தரும் விறலியரும் ஆடற்கலைஞர்கள்; பாணர் இசைக்கலைஞர்கள். இவர்கள் சிறுசிறுக் குழுக்களாக, ஊர் ஊராகச் சென்று மக்கள்முன் ஆடலும் பாடலும் நிகழ்த்தினார்கள்.

சங்க இலக்கியத்தில் ஆடல்

திருக்கோடிக்கா

சங்க இலக்கியங்களான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தமிழர் வாழ்வில் ஆடலும் பாடலும் இரண்டறக் கலந்திருந்ததை உணர்த்துகின்றன. அறுவடை, திருவிழா, போர்வெற்றிகளின்போது மக்கள் குழுக்களாகத் தமக்குள் மகிழ்ந்தாடினார்கள்.

சரி.. அந்நாளைய தொழில்முறைக் கலைஞர்கள் யார்?

பாணரும் பாடினியரும் பாட்டில் வல்லவர்கள்; அதிலும் பாணர், யாழிசைப்பதிலும் வல்லவராக இருந்தனர். கோடியரும் வயிரியரும் விறலியரும் ஆடல் கலைஞர்கள்; அவர்கள் கருவிக் கலைஞர்களாகவும் இருந்தனர். தங்கள் கருவிகளைப் பைகளில் வைத்துக்கொண்டு வெவ்வேறு ஊர்களுக்குப் பயணப்பட்டனர்.

—– சில் அரி கறங்கும் சிறுபல்இயத்தொடு

பல்லூர் பெயர்வனர் ஆடி, ஒல்லெனத்

தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப்பையர்

இரும்பேர்ஒக்கல்கோடியர் இறந்த புன்தலை மன்றங்காணின்——-

(பாடிய புலவர் – அதியன் விண்ணத்தனார், அகநானூறு 301)

என்ற அகநானூறு பாடல், ஆடற்கலைஞர்களான கோடியர் தம் சுற்றத்தாரோடு சிறிய இசைக்கருவிகள் பலவற்றைக் கலப்பையில் (இசைக்கலங்களைக் கொண்ட பை – கலப்பை) எடுத்துக்கொண்டுப் பல ஊர்களுக்குச் செல்வதைக் குறிக்கிறது. அந்தக் கலப்பை எப்படி இருந்தது என்பதையும் பாடல் விளக்குகிறது. தலைப்புணர்த்துஅசைத்தபல்தொகைக்கலப்பையர்– என்ற வரி, மேல்பகுதியை முடிச்சுப் போட்டுக் கட்டிய பைகளில் இசைக்கலங்களை எடுத்துச் சென்றதைச் சொல்கிறது.

சங்கம் மருவிய காலத்து ஆடல்

தாராசுரம்

சங்கம் மருவிய காலத்து இலக்கியமான சிலப்பதிகாரம், தமிழரின் ஆடற்கலை வரலாறை ஐயமின்றிக் காட்டும் இலக்கிய ஆவணம். கூத்தின் பல வகைகளையும் தன்னுள் அடக்கிய ஆடல் பற்றிய மிகச்சிறந்த நூல். அக்காலத்தில் நாட்டிய நன்னூல், ஓவியச் செந்நூல் என்று கலைகளைப் பயிற்றுவிக்கும் சிறப்பு நூல்கள் வழக்கிலிருந்ததையும் பல்வேறு நாடகக் காப்பியங்கள் கற்பிக்கப்பட்டதையும் சிலம்புவழி அறியலாம். நடனமாடியோர் தலைமுதல் கால்வரை அணிந்த அணிகள், கூந்தலைப் பேணவும் ஒப்பனை செய்துகொள்ளவும் என்னென்ன பயன்படுத்தினர் ஆகிய தகவல்களையும் சிலம்பு விரிவாக உரைக்கிறது.

குறிப்பாக, சிலம்பின் அரங்கேற்றுக்காதை, கூத்து, நாடகம், ஆடல் போன்ற வெளிப்பாட்டுக் கலைகளை அரங்கேற்றும் முறையில் தவிர்க்க இயலாக் கையேடாக அமைகிறது.

ஆடல்மகள் மாதவியின் முதன்முதல் அரங்க நிகழ்வை விளக்கும் அரங்கேற்றுக் காதை –

  • ஆடல் கலைஞரிடம் எதிர்பார்க்கப்படும் ‘உயரிய’ தகுதிகள்
  • அக்கலைஞரை வழிநடத்தும் ஆசிரியரின் தகுதிகள்
  • இசையாசிரியன் மற்றும் கருவியிசைக் கலைஞர்களின் தகுதிகள்

ஆகியவை குறித்து அறிவுறுத்துகிறது. கூடவே, மேடை வடிவமைப்பு முதல் எழினி எனப்படும் திரைச்சீலைகள், ஆடை, அணிகலன் என்ற பல்வேறு இலக்கணங்கள் குறித்தும் தெளிவுபட விளக்குகிறது.

ஆக, சிலப்பதிகாரக் காலத்திலேயே தமிழகக் கலைகள் உயர்நிலையில் வளர்ந்து நின்றதை இளங்கோவடிகளின் காப்பியம் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது.

கலித்தொகையின் ‘கடவுள் வாழ்த்து’

கொடும்பாளூர்

சங்ககால இறுதிக்கட்ட நூலான கலித்தொகையின் கடவுள் வாழ்த்து-

கொடுகொட்டி, பாண்டரங்கம், கபாலக்கூத்து என்ற மூவகைக் கூத்துக்களையும் ஆடுபவராகச் சிவனை அறிமுகப்படுத்துகிறது.

படு பறை பல இயம்பப் பல் உருவம் பெயர்த்து நீ 
கொடுகொட்டிஆடுங்கால் கோடு உயர் அகல் அல்குல்,
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ?

மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து
பண்டரங்கம்ஆடுங்கால் பணை எழில் அணை மென்தோள்,
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ?  

கொலை உழுவைத் தோல் அசைஇக் கொன்றைத் தார் சுவல் புரளத்
தலை அங்கை கொண்டு நீ காபாலம்ஆடுங்கால்,
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?

(5-13, கலித்தொகை கடவுள் வாழ்த்து)

சிவபெருமான், பறைகள் ஒலிக்கப் பல உருவங்கள் மாறிக் கொடுகொட்டி ஆடுகிறார்; போர்கள் பல வென்று, திருநீறணிந்து பாண்டரங்கம் ஆடுகிறார்; புலியின் தோலை இடையுடுத்தி, கொன்றைத்தார் கழுத்தினின்று தொங்க, கையில் அரக்கனின் தலையேந்திக் காபாலக்கூத்து ஆடுகிறார். இந்த ஆட்டத்துக்கு- சீர், தூக்கு, பாணி ஆகிய தாளங்களை உமை தந்திட, இறைவன் தம் ஆடலால் உலகை வாழ்த்துவதாக (காப்பதாக) அமைகிறது கலித்தொகையின் கடவுள் வாழ்த்து.

தொல்காப்பியம், சங்கம், காப்பியக்காலம், பத்திமைக்காலம் வரையிலான தமிழ் இலக்கியங்கள் மூலம் ஆடல் குறித்து நாம் அறிவது-

  • முதலில்… உணர்வுகளை வெளிப்படுத்தும் மக்கள் ஆடலும், மண்ணுக்குரிய கடவுளரை நோக்கிய மக்கள் ஆடலும் இருந்தன
  • அடுத்து.. கடவுளரே நடனம் ஆடுபவராகவும் மாறினர்
  • பத்திமை இலக்கிய முன்னோடியாம் காரைக்கால் அம்மையாரோ, கண்டோர் வியக்கும் வலிமையுடைய நடனத்தால் அனைத்துலகையும் தம் கட்டுப்பாட்டில் அடக்கிய பெருந்தெய்வமாகச் சிவனை முன்னிறுத்துகிறார்
  • மெதுமெதுவாக, காளியைப் புறந்தள்ளிச் சிவன் ‘ஆடல்’ என்ற கலைவடிவின் வெற்றித் தலைமகனாகிறார்
  • பத்திமை இயக்கக் காலத்தில், சிவன் – ஒப்புயர்வற்ற ஆடல் தெய்வமாக உயர்த்தப்படுகிறார்.

ஆக, ஆடற்கலை வரலாறைச் சுருக்கமாகப் பார்த்தால்- சமூகம் சார்ந்த மக்கள் கலையாக இருந்த ஆடல் மெதுவாக – இறைவனோடும், இறை வழிபாட்டோடும், இணைக்கப்படும் புராணங்களோடும் பிணைக்கப்படுகிறது. பத்திமைக் காலத்தில் – கோயில்களோடு தொடர்புடைய கலையாக ஆடற்கலை மிளிரத் தொடங்குகிறது.

பத்திமை இலக்கியங்கள்வழி ஆடற்கலைச் செய்திகள் சில…

கோயில் கோயிலாகச் சென்று இறைவனை வழிபட்டுப் பதிகங்கள் பாடிய நாயன்மார், அவர் கோயில்கொண்ட ஊர்களின் சிறப்புக்களையும், ஊர் வீதிகளில் கண்ட பல்வேறு காட்சிகளையும் நம்கண்முன் காட்டுகிறார்கள். அவற்றில் ஆடற்கலைத் தொடர்புடையச் செய்திகளும் விரவியிருக்கக் காண்கிறோம்.

தமிழ்நாட்டுத் தெருக்களில் மங்கையர் பொன்னும் மணியும் அணிந்து ஆடினர் என்றும், முழவின் இசையோடு பெண்கள் பாடியாடும் ஒலிகள் ஆடற்பள்ளிகளில் கேட்டதையும் எழுதியுள்ள திருமுறை பாடிய நாயன்மார், பல்வேறு கருவிகள் குறித்தத் தகவல்களும் தருகிறார்கள். இதனால், ஆடற்பள்ளிகள் வளர்ந்திருந்ததும், பெண்கள் முறைப்படிக் கற்றுக்கொண்டு ஆடல் நிகழ்த்தியதும் தெரியவருகிறது.

கூகூர்

காரைக்கால் அம்மையாரின் இந்தப் பாடலில், அவர் தரும் கருவிப் பட்டியலைப் பாருங்கள்-

துத்தங் கைக்கிளை விளரிதாரம் உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச்

சச்சரி கொக்கரை தக்கையோடு தகுணிதம் துந்துபி தாளம்வீணை

மத்தளங் கரடிகை வன்கைமென்றோல் தமருகங் குடமுழா மொந்தை வாசித்

தத்தனை விரவினோ டாடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே

(மூத்த திருப்பதிகம் (கொங்கை திரங்கி) 9)

இது, சிவன் ஆடிய கருவிகளின் பட்டியல் மட்டுமல்ல, 4-5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையாரின் காலத்திலேயே தமிழ்ச் சமூகத்தில் புழக்கத்தில் இருந்த கருவிகளின் பட்டியல் என்பதுதான் இலக்கியம் வழங்கும் வரலாற்றுச் செய்தி.

திருவையாறு கோயிலில் சிவனை வழிபடச் செல்லும் சம்பந்தர், தாம் காணும் காட்சிகளை விளக்குகிறார். அதில் ஒன்று,

வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறிகாட்டும் விகிர்தனாகிப்

பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியனார் நண்ணுங்கோயில்

காந்தார மிசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித்

தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே

திருஞானசம்பந்தர், தலம் : ஐயாறு, 01.130.6

கொன்றை மலர்களைச் சடையிலணிந்த சிவபெருமான் கோயில் கொண்டுள்ள திருவையாறுக்குள் சம்பந்தர் செல்லும்போது, காந்தாரப் பண்ணிலே காரிகையார் பண்பாட, தேம் தாம் என்று தாளம் ஒலிக்கச் சேயிழையார் அரங்கேறி நடனமாடுவதைக் காண்கிறார். தம் பாடலில் அதை ஆவணப்படுத்துகிறார்.

இப்படி, தொல்காப்பியம் தொடங்கிப் பத்திமைக் காலம் வரையிலான தரவுகள் நமக்கு உணர்த்துவது தமிழர் கலைகளின் தொன்மையையும் தொடர்ச்சியையும்.

சுருக்கமாகச் சொன்னால்,

  • சமூகத்தில் மக்கள் வாழ்வின் நிகழ்வுகளோடும் உணர்வுகளோடும் ஆடற்கலை இரண்டறக் கலந்திருந்தது
  • பண்ணோடு பாடுவதும், கருவிகள் இசைப்பதும், அதற்கேற்ப ஆடல் நிகழ்த்துவதும் இயல்பு வாழ்வின் பகுதியாயிருந்தது
  • தெருக்களிலும் மரநிழலிலும் குன்றுகளிலும் மண்வெளிகளிலும் சதுக்கங்களிலும் ஆடியதோடு, அரசர்க்கென சிறப்பரங்குகளிலும் ஆடல் நிகழ்ந்தது
  • சிலம்பு காலத்திலேயே ஆடல்- நாட்டிய நன்னூல் வழி கற்பிக்கப்பட்டு, அரங்க விதிமுறைகளோடு உயர்நிலையை எட்டியிருந்தது
  • பத்திமைக் காலத்தில், இறையாடல்களோடு ஆடல் கோயில் கலைகளில் ஒன்றாக மாறி மிளிர்ந்தது

என்று அறிகிறோம்.

சோழர் காலம் – ஆடற்கலையின் பொற்காலம்

தொல்காப்பியம் முதல் பத்திமைக் காலம் வரையிலான தமிழகத்து ஆடற்கலையை நோக்கியதன் காரணம், வரலாற்றில் அடுத்தக் காலக்கட்டமான சோழர்காலத்தின் ஆடலும் ஆடல்சார்ந்த கலைவளர்ச்சியும் தமிழகக் கலைவரலாற்றுத் தொன்மையின் தொடர்ச்சி என்பதைப் புரிந்துகொள்ளத்தான். ஆனால் சோழர்கள், அந்தத் தொடர்ச்சியை அழகுபடுத்தி விரிவுபடுத்தி மாபெரும் சாதனைச் சின்னங்களாக மாற்றிக் கொண்டதுதான் சோழர்கால ஆடற்கலை இன்றளவிலும் உலகோர் வியக்க நிலைத்து நிற்பதற்கான பெருங்காரணம் எனலாம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பலவிதப் பரிமாணங்களில் பொலிவுற்று வளர்ந்துநின்ற ஆடற்கலையை உச்சம்தொட உயர்த்திப் பிடித்தனர் சோழ மன்னர்கள். சோழர் காலத்தில் ஆடற்கலை வளர்ந்த நிலையைப் பலப்பலப் பகுப்புகளில் காண இயலும். இந்தப் பகிர்வில், பின்வரும் பகுப்புகளில் பார்க்கலாம்-

  • ஆடவல்லான் என்ற அழியாப் புகழ்நிலை
  • சோழர் கால இசைக் கருவிகள்
  • வலபியின் பூதவரிகள்
  • கரணச் சிற்பங்கள்
  • தளிச்சேரிக் கல்வெட்டு
  • ஆடல் பயிற்றுவித்தோர்
  • ஆடல் மகளிர் ஒப்பனை

ஆடவல்லான் என்ற அழியாப் புகழ்நிலை

திருநல்லம்

பத்திமைக் காலத்தில் ‘ஆடல்கலையின் தனிப்பெரும் தெய்வமாக’ சிவன் மாற்றப்பட்டு உயர்த்தப்படுகிறார். ஆடவல்லான் என்றும் கூத்தாடவல்லான் என்றும் பல்லவர்காலத் திருநாவுக்கரசர் பாடிய ஆடல்தலைவன் சிவன், காளியை நடனப் போட்டியில் வென்ற ஊர்த்துவர். அவர்தான், காரைக்கால் அம்மை தம் பாடலில் காட்டிய- ‘எடுத்த பாதம் அண்டமுற நின்றாடிய’ ஆடவல்லான்.

அப்படிச் சிவனுடைய பேராற்றலின் வெளிப்பாட்டாக அமைந்த பல்லவ ஊர்த்துவரை, அமைதி பொருந்திய ஆனந்த தாண்டவராக மாற்றி, சிற்றுருவச் சிற்பங்களாக வடித்தனர் 9ஆம் நூற்றாண்டு முற்சோழர்கள். 10ஆம் நூற்றாண்டுச் செம்பியன் மாதேவியோ – கண்கொள்ளா, எண்ணத்தில் அடங்கா, அளவிலும் அழகிலும் பெரிதான சிவனாரின் ஆனந்த தாண்டவ வடிவத்தைக் கல்லிலும் செம்பிலும் வழங்கினார். அச்சிற்பங்களின் அழகை என்னவென்று விவரிப்பது!

சிவனாரின் ஆனந்த தாண்டவ ஆடல்நிலையைக் காண்போர் கண்கள் அதுவரைக் காணா அழகுடன் அமைத்ததோடு, தனிக்கோட்டத்தில் அச்சீர்மிகு சிற்பத்தை இடம்பெறச் செய்தவர் ‘மழவரையர் மாணிக்கம்’ செம்பியன்மாதேவி.

செம்பியன்மாதேவி

முதலாம் பராந்தகச் சோழரின் மகன் கண்டராதித்தரின் மனைவியான செம்பியன்மாதேவி, தம் கோயில்களில் ஆடவல்லானுக்குச் சிறப்பிடம் அளித்து, தனிக்கோட்டத்தில் அமைத்தது மட்டுமல்லாமல், காரைக்கால் அம்மையையும் முதன்முதலில் சிற்பத்தில் கொணர்ந்தார். 10ஆம் நூற்றாண்டுத் தமிழகக் கோயில் படிமவியலில், சிவனுடைய ஆடல், ‘ஆனந்த தாண்டவம்’ என்று பார்போற்றும் வியத்தகு ஆடல் தோற்றநிலையாக மாறும் வளர்ச்சியை இது காட்டுகிறது. 

காரைக்கால் அம்மை பாடிய இசைக்கருவிகளையும், அக்கால வழக்கிலிருந்த கருவிகளையும் ஆடவல்லானின் ஆடலுக்குத் துணையாக வைக்கவும் அவர் தவறவில்லை. திருநல்லம், திருக்கோடிக்கா, ஆடுதுறை, கருந்திட்டைக்குடி போன்ற கோயில்களில் ஆடவல்லானின் காலடியில் கருவிகள் இசைக்கும் கணங்களைக் காணலாம்.

செம்பியன் மாதேவியாரின் கருந்திட்டைக்குடி ஆடவல்லான்

கருந்திட்டைக்குடியில் செம்பியன் மாதேவியார் அமைத்த தாழ்சடை எட்டுத்திசையும் வீசிய ஆடவல்லான் கோட்டத்தில் இடம்பெறும் இசைக் கருவிகள், கண்ணைக் கவர்வதோடு மனதையும் கொள்ளை கொள்கின்றன. ஆடல் நிகழ்த்தும் சிவனின் வலப்பக்கத்தில் காளி ஆடிக்கொண்டிருக்கிறார்; இடப்பக்கத்தில், பிருங்கி முனிவர் ஆடுகிறார், காரைக்கால் அம்மையாரோ சிவனாரின் ஆனந்த தாண்டவத்தைக் கண்டு எல்லையில்லாப் பூரிப்பை வெளிப்படுத்துகிறார். தஞ்சைப் பெருவுடையார் கோயில் விமானக் கருவறை ஓவியத் தொகுதியிலும் அம்மையை இதேபோன்ற பரவசநிலையில் காணலாம்.

ஆடவல்லான் தன் வலக்கையில் தமருகம் ஏந்தியிருக்க, நந்தி மத்தளம் வாசிக்க, குடமுழவு, இலைத்தாளம், குழல், சங்கு ஆகிய கருவிகளை கணங்கள் இசைக்குமாறு அமைந்திருக்கிறது அச்சிற்பக்கோட்டம். இப்படி, ஆடலின் தலைவன் தன் கையில் தமருகம் அசைக்க, ஆடலுக்குக் கருவியிசை வழங்கும் கலைஞர்களும், அவர்தம் கைகளில் இசைக்கருவிகளும், சேர்ந்து ஆடும் காளியும் பிருங்கியும், கண்டு களிக்கும் காரைக்கால் அம்மையாரும் என்று, இத்தனையும் ஒரே கோட்டத்தில் அமையப்பெற்ற சிற்பத்தை வேறெங்கும் காண இயலாது.

சச்சரிகொக்கரைதக்கையோடுதகுணிதம்துந்துபிதாளம்வீணை – மத்தளம்கரடிகைவன்கைமென்றோல்தமருகம்குடமுழாமொந்தை – வாசித் தத்தனை விரவினோடாடும் எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே என்று மூத்த திருப்பதிகத்தில் காரைக்கால் அம்மை வழங்கிய கருவிப் பட்டியலைச் சிற்பத்தில் மெய்ப்பித்துக் காட்டவே இக்கோட்டத்தைச் செம்பியன் மாதேவியார் அமைத்தாரோ என்றெண்ணத் தோன்றுகிறது.

இவ்வகையில், காரைக்கால் அம்மையின் திருவாலங்காட்டு ஊர்த்துவச் சிவனைச் செம்பியன் மாதேவியார் தம் கருந்திட்டைக்குடி ஆனந்த தாண்டவ ஆடவல்லானாக உலகோர் மலைக்கும் கலை வடிவமாகப் படைத்தது, ஆடவல்லான் வழி வளர்ந்த சோழர் ஆடற்கலை குறித்து மேலும் சிந்திக்கத் தூண்டுகிறது.

சோழர் கால இசைக் கருவிகள்

தம் கால இசைக் கருவிகளை ஆவணப்படுத்த ஆடவல்லான் சிற்பங்களையும், மக்கள் ஆடல் சிற்பங்களையும், வலபிப் பகுதியின் பூதவரிகளையும் மிக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர் சோழ ஆட்சியாளர்கள். பொதுவாக, தோல் கருவிகள், துளை அல்லது காற்றுக் கருவிகள், நரம்புக் கருவிகள், கஞ்சக் கருவிகள் என்று இசைக்கருவிகளை நான்கு வகையாகப் பிரிப்பார்கள். மத்தளம், செண்டை, குடமுழவு, உடுக்கை, இடக்கை, மொந்தை, தமருகம் போன்ற தோல்கருவிகள்; காளம், கொம்பு, குழல், சங்கு போன்ற துளைஅல்லதுகாற்றுக்கருவிகள்; யாழ், வீணை, சிரட்டைக் கின்னரி போன்ற நரம்புக்கருவிகள்; குமிழ் தாளங்கள், பெரிய தாளங்கள், தாமரை இலைத் தாளங்கள் என்ற மூன்று வகையில் கஞ்சக்கருவிகளைச் சோழர் காலச் சிற்பங்களிலும் கல்வெட்டுக்களிலும் காணமுடிகிறது.

கருந்திட்டைக்குடியில் செம்பியன்மாதேவி அமைத்த ஆடவல்லான் கோட்டத்தில் இணைந்த இசைக்கருவிகளை ஏற்கனவே பார்த்தோம். சோழர் சிற்பங்கள் காட்டும் பல்வேறு கருவிகளைப் படங்கள்வழி காண்போம்.

சிரட்டைக் கின்னரி

நரம்புக் கருவிகளில் சிரட்டைக் கின்னரிக்குத் தனிச்சிறப்பு உண்டு. தமிழ்நாட்டில் கிடைக்கப்பெறும் முதல் வில்லிசைக் கருவியாக ஆய்வாளர்கள் சுட்டும் சிரட்டைக் கின்னரி, பல்லவர்-பாண்டியர் கோயில்களில் காணப்பட்டாலும், சோழர்களால் பெரிதும் கையாளப்பட்டுள்ளது. பூதவரிகளில் மிகுதியாகக் காணப்பெறும் சிரட்டைக் கின்னரியைக் காரைக்கால் அம்மையார் கைகளில் கொடுத்து அழகு பார்த்தவர் முதலாம் இராஜராஜர்.

‘பேயாய நற்கணத்துள் ஒன்றாய நாம்’ என்று தம் அற்புதத்திருவந்தாதியில் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார் காரைக்கால் அம்மை. முதலாம் இராஜராஜரின் திருப்புகலூர்க் கோயில் ஆடவல்லான் சிற்பத்தின்கீழே, அம்மை பேயாய நற்கணங்களுள் ஒருவராக அமர்ந்திருக்கக் காணலாம். அச்சிற்பத்தின் கூடுதல் சிறப்பு, அம்மை கையிலேந்திய சிரட்டைக் கின்னரி. அதுவரைக் காணப்படும் பிற கோயில் சிற்பங்களில் அம்மை தாளக் கருவியோடு அமர்ந்திருக்க, முதன்முறையாகத் திருப்புகலூரில் இறையாடலுக்குச் சிரட்டைக் கின்னரி இசைக்கிறார் அம்மை.

தாளக் கருவியுடன் சில சிற்பங்கள் –

வீணையுடன் சிவன்

பெரும்பாலும் முற்சோழர் கோயில் விமானக் கோட்டங்களில் சிவனை வீணையேந்தியவராகக் காணலாம்.

தாராசுரம்

பல முற்சோழர் கோயில்களில் அழகுற அமைக்கப்பெற்ற சிற்றுருவச் சிற்பங்களைக் காணமுடியும். சோழர்களின் சிற்றுருவச் சிற்பக்கலைத் திறனை ஒளியூட்டிக் காட்டப் புள்ளமங்கை ஆலந்துறையார் கோயிலொன்றே போதும். ஆயினும், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலைச் சிற்றுருவச் சிற்பங்களின் கருவூலமாகக் கொள்ளலாம். தாராசுரம் கோயில் மண்டபத் தூண் சிற்பங்கள், அக்கால ஆடற்கலையின் வளர்நிலையையும் அதைக் கல்லிலே கொணர்ந்த சிற்பக்கலையின் உயர்நிலையையும் வெளிக்காட்டுகின்றன. அத்தகு சிற்பங்களில் காணப்படும் தமிழகத்து இசைக்கருவிகள் சில-

தமிழகத்தில் தாராசுரத்துக்கு முன்னும் பின்னும் பல கோயில்களில் கருவியிசைச் சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டிருப்பதுபோல, இந்தோனேசியாவின் போரோபுதூர் பௌத்த கோயில் புடைப்புச் சிற்பங்களிலும், கம்போடியக் கோயில்களிலும் பற்பல இசைக்கருவிகளைக் காணமுடிகிறது.

உடுக்கை

“சங்க, காப்பியக் காலத்தில் பெருவழக்குப் பெற்றிருந்த துடி, பத்திமைக் காலத்தில் உடுக்கை என்று அழைக்கப்பட்டு, சோழர் காலத்தில் ஆடலுக்குகந்த இசைக்கருவியாகத் திகழ்ந்தது,” என்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன்.

ஒரு கையால் கருவியைப் பிடித்துக்கொண்டு, மறுகையால் அடித்து ஒலி எழுப்புவதாக உடுக்கையைச் சிற்பங்கள் விளக்குகின்றன. சில சிற்பங்களில் கையல்லாது கோலைக் கொண்டும் முழங்குவதைப் பார்க்கமுடிகிறது.

வலபிப் பகுதியின் பூதவரிகள்

சிற்பக் கலைஞர்கள் தம் கற்பனை ஆற்றலை வெளிப்படுத்தப் பயன்படுத்திக் கொண்ட கோயிலின் மற்றொரு பகுதி- கோயில் கூரையுறுப்புக்களில் ஒன்றான வலபிப் பகுதி. ஆடலோடு தொடர்புடைச் செய்திகளை வழங்க வலபிப் பகுதியில் பூதவரிகளை அமைத்தனர். ஆடவல்லானின் ஆடலுக்கு இசைக்கூட்டிய பூதங்களுக்கெனத் தனியிடம் தந்து, சிறப்புமிகு கருவிகளை அவற்றின்மூலம் காட்சிப்படுத்திய நுண்ணிய அறிவை என்னவென்று சொல்வது! இசைக் கருவிகளோடு காணப்படும் பூதங்கள் மிகுதி எனினும், ஆடும் பூதங்களும் கேலி செய்யும் பூதங்களும் தமக்குள் சண்டையிடும் பூதங்களும்கூட உண்டு.

இடைச்சோழர் காலத்துக்கு முந்தைய பல்லவர் கற்றளிகளிலும் பாண்டியர் குடைவரைகளிலும் காணப்படும் பூதவரிகள், சோழர்களின் தொடக்கப்பணியோ தனிச்சிறப்போ அல்ல. எனினும், கோயில் கட்டடக்கலையில் வானளாவிய உயரங்களையும் மாபெரும் அளவுகோல்களையும் எட்டிப்பிடித்த வல்லவர் அமைத்த கலைச்செல்வங்களில் பூதவரிகள், மிகநீண்ட வரிசைகளாலும் கருவிகளாலும் தனித்து நிற்கின்றன.

கோயிலுக்குச் செல்வோரைத் தம் பலவகை முக உணர்வுகளைக் காட்டி ஈர்க்கும் பூதவரிகள் சொல்லும் கதைகளும் தகவல்களும் ஏராளம் ஏராளம்.

கரணச் சிற்பங்கள்

குடந்தை சார்ங்கபாணி

பலவிதக் கூத்துக்களும் பண்ணுடன் பாட்டும் காலங்காலமாக ஒலித்துக் கொண்டே இருந்த தமிழ் மண்ணில், சிலம்பு காலந்தொட்டே ஆடற்கலை முறைமைப்படுத்தப்பட்ட நிலையை எட்டியிருந்தது அறிவோம். நாட்டிய நூல்கள், ஆடற்பள்ளிகள், தேர்ந்த ஆசிரியர்கள் கொண்டு ஆடலும் பல்வகைக் கூத்துக்களும் பயிற்றுவிக்கப்பட்டதும் அறிவோம். இது சோழர்காலத்திலும் தொடர்ந்தது. இறை ஆடல், மக்கள் ஆடல், இசைக் கருவிகள் என்று கோயில் சிற்பங்கள்வழி வழிபாட்டோடு கலைகளும் வளர்த்த சோழர்கள் அடுத்து ஆவணப்படுத்த நினைத்தது – நாட்டிய சாத்திரவழி ஆடல் பயிற்சியை.

பல்லவர்காலந்தொட்டே பரதரும் அவர் இயற்றிய நாட்டிய சாத்திரமும் தமிழ்நாட்டில் அறியப்பட்டிருந்தன. நாட்டிய சாத்திரம் தோன்றிய வரலாறின் ஒரு கதைப்பகுதியை முதன்முதலில் சிற்பத்தில் அமைத்தார் இரண்டாம் நரசிம்மவர்மரான இராஜசிம்மர். அவருடைய கட்டுமானப் பணியான, தர்மராஜ ரதமென்று இன்றழைக்கப்படும் மாமல்லபுரத்து அத்யந்தகாம பல்லவேசுவரகிருஹத்தில், சிவபெருமானும் தண்டுவும் ஒரே கோட்டத்தில் அமையுமாறு, அதிலும் ஆசிரியரான சிவனுக்கு மாணவர் தண்டு ஆடிக்காட்டும் சிற்பம் அழகுறப் படைக்கப்பட்டுள்ளது. காஞ்சி கைலாசநாதர், பிறவாதானீசுவரம், இறவாதானீசுவரம், முக்தீசுவரம், மதங்கீசுவரம் போன்ற பல்லவர் தளிகளில் தனித்த பல கரணச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பல்லவர் படைப்புகள் தண்டுவைச் சிற்பங்களில் அறிமுகப்படுத்திட, சோழர் படைத்த பரதரின் தாண்டவ லட்சணக் கரணச் சிற்பங்களோ – நாட்டியப் பயிற்சிக்கெனக் கோயில்களை ஆடல்கலைக்கூடங்களாக அவர்கள் மேம்படுத்தியப் போக்கைக் காட்டுகிறது.

தஞ்சை இராஜராஜீசுவரத்துக் கரணச் சிற்பங்கள்

தமிழர் பெருமையைப் பேரளவில் பறைசாற்றும் இயல்புடைய முதலாம் இராஜராஜர், பார் போற்றும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில், வழக்கிலிருந்த 108 கரணங்களை வரிசைப்படி செதுக்கச் செய்தார். இத்தகைய முயற்சி அக்காலத்தே இந்தியத் துணைக்கண்டத்தில் வேறெங்கும் தொடங்கப்படாத புதிய முயற்சியாகும். விமானத்தின் இரண்டாம் தளச் சுற்றில், கருவறையின் புறச்சுவர்களில் 81 கரணச் சிற்பங்கள், சிவபெருமான் ஆடிக்காட்டுவதாக அமைத்துள்ளனர். சிவபெருமானே கரணங்களை ஆடிக்காட்டும் சிற்பத்தொகுதிகள் இந்தியாவில் வேறெங்கும் இல்லை.

குடந்தை சார்ங்கபாணி கோயில் கரணச் சிற்பங்கள்

மாமல்லபுரத்து அத்யந்தகாம பல்லவேசுவரகிருஹத்தில் சிவனுக்குத் தண்டு ஆடிக்காட்டும் பல்லவச் சிற்பம் குறித்து ஏற்கனவே பார்த்தோம். நாட்டிய சாத்திரத்தின் அந்தக் கதையின் தொடர்ச்சியாக, சிவனின் ஆணையேற்று பரதருக்குத் தண்டு கரணங்களைக் கற்றுத் தருவது, கும்பகோணம் சார்ங்கபாணி கோயில் கோபுரத்தில் காட்டப்பட்டுள்ளது. கரணங்களை ஆடிக்காட்டும் வடிவம் தண்டுவே என்பதும், இது நாட்டிய சாத்திர வரலாற்றுப் பின்னணியில் அமைந்த கரணச் சிற்பத்தொடர் என்பதும் டாக்டர் இரா. கலைக்கோவனால் கண்டறியப்பட்டன. கூடுதலாக, சார்ங்கபாணி கோயில் கரணத் தொடரில் பரதரும் அவர் சீடர்களும் உள்ள சிற்பமும் அவராலேயே முதன்முதலில் அடையாளப்படுத்தப்பட்டது.

கும்பகோணம் சார்ங்கபாணி கோயில் கோபுரத்தின் நான்கு திசைகளிலும் கரணச் சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன. சிற்பங்களின் கீழே கரணப் பெயர்களைச் சோழ கிரந்த எழுத்துக்களில் செதுக்கியுள்ளார்கள். கரணங்களுக்கு இசையூட்டச் சிறுச்சிறு பூதங்கள் பலப்பலக் கருவிகளை இசைக்கின்றன.

தெளிவான ஆடல்நிலைகள், கண்ணைக் கவரும் ஆடை வடிவமைப்பு, பொருத்தமான அணிகள் என்று ஆடற்கலை அக்காலத்தே செழித்து வளர்ந்ததைக் குடந்தைக் கரணச் சிற்பங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

சோழர் காலத்தில் மூன்று கோயில்களில் 108 கரணங்களைச் சிற்பங்களாக்கும் பணி நடைபெற்றது –

அ. தஞ்சை இராஜராஜேசுவரம்

ஆ. சோழமார்த்தாண்ட சதுர்வேதிமங்கலம் திருமயானமுடையார் கோயில்

இ. வேங்கடத்தான் துறையூர் திருவாலீசுவரம்

திருமயானமுடையார் கோயில் சிதைவுற்றபோது, அங்கிருந்த கரணச் சிற்பங்கள் சார்ங்கபாணி கோயிலுக்கு மாற்றப்பட்டன. வைணவ வழிபாட்டுத் தலமான திருமால் கோயிலில் சிவன் அறிவுறுத்திய கரணச் சிற்பங்கள் இடம்பெற்றது குறித்தப் பல்லோரின் ஐயங்களுக்கு விடை இதுதான்.

வேங்கடத்தான் துறையூர் திருவாலீசுவரம் திருக்கோயில் சிதிலமடைந்தபோது, அங்கிருந்த கரணச் சிற்பங்கள் அருகிலுள்ள மதுரகாளியம்மன் கோயிலுக்கு மாற்றப்பட்டன. தஞ்சை, குடந்தை தவிரவும் – புள்ளமங்கை, மேலப்பெரும்பள்ளம், பொன்செய் நல்துணை ஈசுவரம், திருச்செந்துறை, திருச்சின்னம்பூண்டி, திருக்கோடிக்கா கோயில்களில் கரணச் சிற்பங்களைக் காணமுடிகிறது. தொடர்ந்து தில்லையிலும் திருவண்ணாமலையிலும் கரணச் சிற்பங்கள் படைக்கப்பட்டன.

முதலாம் இராஜராஜரின் தஞ்சாவூர் தளிச்சேரிக் கல்வெட்டு

சிற்பங்கள் ஆடல்கலையின் வளர்ச்சி நிலைகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. ஆனால், ஆடல்கலைஞர்களின் வாழிடம் எப்படி இருந்தது? அவர்கள் எந்தெந்த ஊர்களிலிருந்து அழைத்து வரப்பட்டனர்? அவர்களுடைய ஊதியம் என்ன ? ஆடல்மகளிர் பணிப்பாதுகாப்புக்காக அரசு என்ன வழங்கியது? அவர்களுடைய ஒப்பந்த விதிகள் என்னென்ன? இப்படி, சிற்பங்கள் சொல்ல இயலாத சமூகத் தகவல்களைத் ஆவணப்படுத்துவதில் சோழர்கள் தலைச்சிறந்தவர்கள் என்பதற்குச் சான்றுதான் தளிச்சேரிக் கல்வெட்டு.

தளிச்சேரிகள் குறித்த கல்வெட்டுச் செய்திகள் சில….

சோழர் காலத்தில் தளிச்சேரிகள் என்றழைக்கப்பட்ட ஆடல் மகளிர் குடியிருப்புகள், தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தன. முதலாம் இராஜராஜர் காலத்தில் சோழமண்டலத்தில் மட்டும் 102 தளிச்சேரிகள் இருந்தன; 102 ஊர்களின் பெயர்களும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 49 தளிச்சேரிகள் கோயில் சார்ந்தும் 53 ஊர்களுக்குள்ளும் இருந்தன. தளிச்சேரிப் பெண்டுகள் என்று கல்வெட்டு சுட்டும் ஆடல்மகளிர், ஆடல் வளர்த்த தளிச்சேரிகளுக்குள் பணியிடமாற்றம் பெறுவர். இராஜராஜீசுவரத்தில் மட்டும் 400 தளிச்சேரிப் பெண்டுகள் இருந்தனர்; அவர்களுடைய பெயர்களும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன.

தளிச்சேரிக் கல்வெட்டு கூறும் ஒப்பந்தவிதிகள்

சிறப்புப் பொருந்திய தளிச்சேரிக் கல்வெட்டுக்கு மேலும் பெருமைச் சேர்ப்பது அதன் ஒப்பந்த விதிகள். அதில் ஒரு சிறு பகுதியைப் பார்ப்போம்.

  • ஓர் ஆடல்மகள் வேறிடம் சென்றுவிட்டால் அல்லது இறந்துவிட்டால், அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஆடலில் பயிற்சி பெற்ற தகுதியுடையவர் அந்தப் பணியில் தொடரலாம்
  • குடும்பத்தில் யாரும் இல்லையென்றால், தகுதியுடைய நபரை உடனடி உறவினர் தேர்ந்தெடுத்துப் பணியில் அமர்த்தலாம்
  • குடும்பத்தாரோ உறவினரோ இல்லாத சூழலில், இறந்த தளிச்சேரிப் பெண்ணின் தகுதியில் பணியாற்றும் மற்றொருவர், புதிய பெண்ணைத் தகுதி அடிப்படையில் பணியில் அமர்த்தலாம்

ஆடல்மகளிரின் இழப்பால் ஆடல்பள்ளிக்கு, அதிலும் குறிப்பாக அவர் குடும்பத்தாருக்குப் பற்பல இன்னல்கள் ஏற்படக்கூடும். அத்தகு இன்னல்கள் மற்றும் இடையூறுகளுக்குக் காலவிரயமின்றி அந்தந்த இடங்களிலேயே தீர்வுகாணும், அதிகாரப் பரவலாக்கப்பட்ட சோழர்களின் நிர்வாக அமைப்பைக் கல்வெட்டின் இப்பகுதி ஒளியூட்டிக் காட்டுகிறது.

ஆடல் பயிற்றுவித்தோர்

ஆடல் பயிலிடங்கள்போல, ஆடல் ஆசிரியர்கள் குறித்தும் சோழர் காலக் கல்வெட்டுக்கள் உரைக்கின்றன –

சோழர் காலத்தில் ஆடல் கற்றுத்தர நட்டுவர்களும், தலைக்கோலிகளும், கூத்தரும் இருந்தனர். தஞ்சை இராஜராஜீசுவரத்துத் தளிச்சேரிப் பெண்களுக்கு நட்டுவம் செய்வதற்காக 7 ஆடலாசிரியர்கள் அமர்த்தப்பட்டதைத் தளிச்சேரிக் கல்வெட்டு குறிக்கிறது. ஆடலில் தலைசிறந்து விளங்கிய பெண்களுக்குத் ‘தலைக்கோலி’ விருது வழங்கப்பட்டதைச் சிலப்பதிகாரம் நமக்குச் சொல்கிறது; சோழர் காலத்திலும் இது தொடர்ந்தது. சிறந்த ஆடல்கலைஞர்களாக விளங்கிய தலைக்கோலிகள் ஆடலாசிரியர்களாகவும் பணியாற்றினர்.

நட்டுவர், தலைக்கோலிகள் தவிர, கோயில் திருவிழாக்களில் பங்கேற்று பல்வேறு கூத்துக்கள் நடத்த கூத்தர்கள் இருந்தனர். இக்கூத்தர்கள், சாந்திக்கூத்து, சாக்கைக்கூத்து, தமிழ்க்கூத்து, கழாய்க்கூத்து போன்ற மரபுசார் கூத்துக்களைக் கோயில்களில் நடத்தினர். தளிச்சேரிப் பெண்டிருக்கு மரபுசார்ந்த கூத்துக்களைக் கூத்தர்கள் கற்றுத்தந்திருக்கக்கூடும் என்பதற்கு நல்லூர் வில்வாரண்யேசுவரர் கோயில் கல்வெட்டைச் சான்றாக வைக்கிறார் டாக்டர் இரா. கலைக்கோவன்.

நல்லூர் ஆடவல்லான் செப்புத் திருமேனிக்குத் தனிப்பெருமை உண்டு. எட்டுக் கைகளையுடைய ஆடவல்லான், தம் நான்கு வலக்கைகளுள் ஒன்றில் தலைக்கோல் ஏந்தியுள்ளார். சிலம்பின் தலைக்கோல் மரபு சோழர் காலத்திலும் தொடர்ந்ததை இது தெளிவுறக் காட்டுகிறது.

சோழர் கால ஒப்பனை

சிற்பங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் இலக்கியங்கள் வாயிலாகச் சோழர்கால ஒப்பனை குறித்து அறியமுடிகிறது. இலக்கியங்களில் குறிப்பாகச் சீவகசிந்தாமணி ஒப்பனை சார்ந்த கூடுதல் செய்திகளை வழங்குகிறது. ஒப்பனை என்பதை அழகூட்டிக் கொள்ளல் என்ற பொதுப்பொருளில் எடுத்துக்கொண்டால் – அணிந்து கொண்ட ஆடை, அணிகள்; சூடிக் கொண்ட மலர்கள், மாலைகள்; பூசிக் கொண்ட பொருட்கள்; தலைக்கோலங்கள் என்று பலப் பிரிவுகளில் பகுத்துக் காண இயலும். 

ஒப்பனை என்பது விரிவான தனி ஆய்வுக்களம் என்பதால் சோழர் சிற்பங்கள் காட்டும் எழில்மிகு ஒப்பனைக் காட்சிகளை மட்டும் இங்கு பார்க்கலாம்.

சோழர் கோயில் சிற்பங்கள், ஒப்பனையுடன் அழகு மிளிரத் தோற்றமளிக்கும் பெண்களையும் ஆண்களையும் காட்டினாலும், இப்போக்கில் தனித்து நின்று மயக்குகின்றனர் மூன்று கோயில்களின் சிற்ப வடிவினர். கீழ்க்கண்ட கோயில் சிற்பங்கள் காட்டும் சோழர்கால ஒப்பனை அழகைக் காண்போம் –

  • கும்பகோணம் நாகேசுவரர் கோயில் மகளிர்
  • திருக்கோடிக்கா கோலாட்டப் பெண்கள்
  • கும்பகோணம் சார்ங்கபாணி கரணச் சிற்பங்கள்

கும்பகோணம் நாகேசுவரர் கோயில் மகளிர்

கூந்தலைக் கொண்டையாக முடிந்த அழகும், செவிகளில் பலவிதக் காதணிகளும், கழுத்தில் ஆரங்களும், முழங்கைக்கருகே கடகவளையும் மணிக்கட்டருகே கைவளைகளும், இடுப்பின் இடப்புறத்திலிருந்து தொங்கும் கொசுவமும் என்று – நாம் மயங்க வேண்டியது இப்பெண்களின் எழிலிலா சிற்பிகளின் திறனிலா? என்று ஐயத்தில் நம்மை வீழ்த்துகின்றனர் குடந்தை நாகேசுவரர் மகளிர்.

தங்களை அழகுப்படுத்திக் கொள்ள அக்காலப் பெண்கள் என்னென்ன செய்து கொண்டார்கள்? சீவகசிந்தாமணியும் சோழற்காலக் கல்வெட்டுக்களும் பல சுவையான தகவல்களை நமக்குத் தருகின்றன. சுருக்கமாகச் சில தகவல்கள் இங்கே-

ஆடற்பெண்களுக்கு நூல்நெறிப்படி ஒப்பனை செய்துவிடப் பெண்கள் இருந்தனர். அவர்கள் நடையறி புலவர் என்றும் வண்ணமகளிர் என்றும் அழைக்கப்பட்டனர். கூந்தலுக்கு – நெல்லிச்சாந்து, கத்தூரி, வாசனையூட்டப்பட்ட எண்ணெய்கள் பயன்படுத்தினர். சிந்தூரப் பொடிகளும் செம்பொற்சுண்ணமும் கலந்த நீரில் குளித்தனர். ஈரம்போகத் துவட்டியபின், அகிற்புகை ஊட்டிக்கொண்டனர். பூசிக்கொள்வதற்கு அரிசிமாவும் மை எண்ணெயும் மஞ்சள் பொடியும் பயன்படுத்தினர். இதழ்களைச் சிவப்பூட்ட வெற்றிலை மென்றனர்.

திருக்கோடிக்கா கோலாட்டப் பெண்கள்

“திருக்கோடிக்காவில் கோபுரப் பெண்கள் ஒரு பாதத்தைப் பார்சுவமாக்கி, ஒரு காலை ஊர்த்வஜாநுவாக உயர்த்திக் கோலாட்டம் அடிக்கின்றனர். பூட்டுக்குண்டலம், கழுத்தணிகள், தோள், கை வளைகள், நெற்றிச்சுட்டி, நடுவிரிப்புடனான இடைப்பட்டாடை, சலங்கையுடன் இரு கைக் கோல்களும் அடுத்துள்ளவர் கோல்களுடன் மோத, விரைந்தும் சுழன்றும் ஆடும் அப்பெண்களின் திருமுகங்கள் பல கோணங்களில் திரும்ப, இதழ்களில் எழிலார்ந்த புன்னகை”,

என்று அழகுற விளக்குகிறார் டாக்டர் இரா. கலைக்கோவன்.

கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுலையார் முகத்தினின்று
சேலோடச் சிலையாடச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே

(திருஞானசம்பந்தர், திருவையாறுப் பதிகம், 1.130.9)

என்று திருஞானசம்பந்தர் திருவையாறில் கண்ட கோலோடு கூத்தாடும் கோதையரைத் திருக்கோடிக்காவிலும் கண்டுக் காட்சிப்படுத்தியுள்ளனர் சோழச் சிற்பிகள்.

கும்பகோணம் சார்ங்கபாணி கோயில் கரணச் சிற்பங்கள்

கல்வெட்டும் இலக்கியமும் ஆடற்கலைஞர்கள் அணிந்த அணிகலன்கள் குறித்துத் தரும் செய்திகள் என்னென்ன? அவர்கள் பொன்னும் நவமணியும் சங்கும் பவழமும் இழைத்துச் செய்த வளைகள் அணிந்தனர்; ஒரு சரம் முச்சரம் ஐஞ்சரம் உடைய மணியாரங்கள் பூண்டனர்; முத்து வடமும் மணி வடமும் அமைந்த இடுப்பைச் சுற்றிய அரைப்பட்டிகையும் கால்களில் பொன்னாலான கிண்கிணியும் பாடகமும் சிலம்பும் அணிந்து மகிழ்ந்தனராம். இந்தச் செய்திகளை மெய்ப்பித்துக் காட்டும் சிற்பங்களைக் காணவும் வியக்கவும் கோயில்களைக் கலைப் பெட்டகங்களாக நோக்குதல் வேண்டும்.

சோழர் சிற்பங்கள் காட்டும் அணிகலன்கள் –

தொல்காப்பியக் காலம்முதல் பல்லவர்-பாண்டியர் காலமான பத்திமைக் காலம்வரை மண்ணோடும் மக்களோடும் கடவுளரோடும் தொடர்ந்த தமிழ்ச் சமூகத்துக் கூத்தும் ஆடலும், சோழர் காலத்தில் பல கோணங்களில் உச்சம் தொட்டதை ஒரு சிலச் சான்றுகளைக் கொண்டு பார்த்தோம். இவை ஒன்றொன்றும் தனித்தனி ஆய்வுத் தலைப்புகள். விரிவாக ஆயமுற்படின், ஆவணங்கள் குவிந்து கிடக்கின்றன – இலக்கியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்களில்.

தொழில்முறைக் கலைகள் சமூக மாற்றங்களால் மாறக்கூடும்; அம்மாற்றம் வளர்ச்சியின் ஒரு பகுதி. அப்படித்தான், ஐந்து வயதில் கற்கத் தொடங்கி, முறைப்படுத்தப்பட்டக் கடும்பயிற்சியால் அரங்கேறிய சிலப்பதிகார மாதவியின் ஆடலையும் வரலாறு நமக்குக் காட்டுகிறது; சோழர்காலத்தில் கோயில்கள் வளர்த்த கரண ஆடலையும் தமிழர் ஆடற்கலை வரலாறு காட்டுகிறது.

ஆனால், மக்கள் கலைகளாக நிற்கும் கூத்தும் பாட்டும் தொடர்ந்து மண்ணில் வாழ்வது நம்மைப் போன்ற மண்ணுக்குரிய மக்களால்தான். அப்படி, இறவா வரம் பெற்று வாழும் சில கலைகள் உண்டு – தெருக்கூத்து, கழைக்கூத்து போல. எடுத்துக்காட்டாக, சங்கப் பாடல்களும் சிலப்பதிகாரமும் குறிக்கும் கூத்துக்களுள் ஒன்றான கலிநடம்- கழைக்கூத்து ஆகும். மூங்கில் கம்புகளை நட்டு, கயிறு கட்டி நிகழ்த்தப்படும் இக்கூத்து, இன்றும் நிகழ்த்தப்படுவதைப் பார்க்கிறோம். கழைக்கூத்தின் ஒரு வகையான கத்திக்கூத்தைக் காட்டும் தாராசுரத்துச் சிற்பம் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஐந்து கத்திகளைச் சுழற்றி வித்தைக் காட்டுபவரைக் கீழே படத்தில் காணலாம்.

2000 ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியங்களும், 1400 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில்களும், ஆவணப்படுத்தப்பட்ட கலைவரலாறும் கிடைக்கப்பெற்ற நாம் செய்யவேண்டியதெல்லாம் அவற்றைப் பேணிக் காப்பதுதான். அவை நம் மரபின் அடையாளங்கள். தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டுமல்ல- தொடர்ச்சியிலும் இருக்கிறது என்பது மொழிக்கு மட்டுமல்ல, தமிழர்க் கலைகளுக்கும் பொருந்தும்.

துணை நூல்கள்

சோழர்காலஆடற்கலை, 2003, அலமு பதிப்பகம் (முதற் பதிப்பு), சேகர் பதிப்பகம், (இரண்டாம் பதிப்பு)

தலைக்கோல், 2004, சேகர் பதிப்பகப் பதிப்பு

மின்கட்டுரைகள்

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் ஓர் அறிமுகம்

Dr.R.Kalaikkovan and Dr.M.Nalini, சோழர் கால ஆடலாசான்கள்

இரா. கலைக்கோவன், தளிச்சேரிக் கல்வெட்டு – வினாக்களும் விளக்கங்களும் 

இரா. கலைக்கோவன், சங்க இலக்கியங்களில் ஆடற்கலை

இரா. கலைக்கோவன், துடி, தமருகம், உடுக்கை 

இரா. கலைக்கோவன், குடக்கூத்து 

இரா. கலைக்கோவன், கோலாட்டம்

  

2 comments

Leave a Reply